ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புடின் வெளியிட்டுள்ள ஆணையில், ‘ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் 1 மில்லியன் ரூபிள் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும்.
தகுதி பெற்ற பெண்களுக்கு அவர்களின் 10ஆவது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் இவ்விருது கிடைக்கும். போர், தீவிரவாத செயல், உடல் நலக்குறைவு, விபத்து சூழல் காரணமாக ஒரு குழந்தையை இழந்தாலும் அவர்கள் விருதுக்கு தகுதி பெறுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவில் பிறப்பு வீதம் குறைந்து வருவதாலும், கொரோனா உயிரிழப்பு- உக்ரைனுடனான போர் போன்ற காரணங்களால் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியில் ரஷ்யாவுக்கு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த உயிரிழப்பை ஈடுசெய்ய ரஷ்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ரஷ்ய பெண்களுக்கு பெரும் தொகையுடன் ‘மதர் ஹீரோயின்’ என்ற கவுர பட்டம் சோவியத் ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்டத்தினை சுமார் 4 லட்சம் தாய்மார்கள் அப்போது பெற்றனர். 1992ஆம் ஆண்டு சோவித் ஒன்றியம் வீழ்ந்தபிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.