ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பதவியை உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளின் நம்பகமான, பாரபட்சமற்ற மற்றும் தைரியமாக இருக்கும் ஒருவருக்கு வழங்க வேண்டும் என உலக உய்குர் காங்கிரஸும் ஏனைய மனித உரிமைக் குழுக்கள் உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா பொதுச்செயலாளருக்கும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள உலக உய்குர் காங்கிரஸும் மற்ற மனித உரிமைக் குழுக்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்செல் பச்செலெட்டின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவுக்கு வருகின்ற நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஷின்ஜியாங் மற்றும் திபெத் போன்ற பகுதிகளில் மனித உரிமைகள் நிலைமையை ஆராய்வதற்கும் பீஜிங்கை கட்டுப்படுத்துவதற்கும் பொன்னான வாய்ப்பு மிச்செல் பச்லெட்டுக்கு கடந்த மே மாத விஜயத்தின் போது ஏற்பட்டிருந்தது.
இருப்பினும், அவர் சீனா விடயத்தில் மிகவும் மென்மையாக நடந்து கொண்டதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டதோடு, உய்குர் மற்றும் திபெத்தியர்களுக்கு எதிரான சீனாவின் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், அவருடைய சீன விஜயம் வீணானது என்றும் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நியமனத்தின்போது, தெரிவுக்கான வெளிப்படையான செயல்முறையொன்றை பின்பற்றப்பட வேண்டும். ஆணையாளர் பதவியானது, உயர் தார்மீக நிலை மற்றும் ஒருமைப்பாடு கொண்ட ஒருவரால் நிரப்பப்பட வேண்டும்.
அத்துடன், மனித உரிமைகள் துறையில் திறமை மற்றும் நிபுணத்துவத்துடன் சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற ஒருவரால் நிரப்பப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அனைத்து விதமான பாகுபாடு, சமத்துவமின்மை, அடக்குமுறை மற்றும் அநீதியை நிவர்த்தி செய்வதற்கும், தண்டனையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கங்கள் உட்பட அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் பரிகாரம் மற்றும் பொறுப்புக்கூறலைப் பின்பற்றுவதற்கும் இந்த பதவிக்கு வலுவான அர்ப்பணிப்பு அவசியமாகவுள்ளது.
ஆணையாளரின் பங்கு உலகின் முன்னணி மனித உரிமை வழக்கறிஞராக இருக்க வேண்டுமே தவிரவும் இராஜதந்திரியகவோ அல்லது அரசியல் தூதுவரின் பாத்திரமாகவோ இருக்க வேண்டியதில்லை.
பாதிக்கப்பட்டவர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவது, துஷ்பிரயோகங்களை பகிரங்கமாக அழைப்பது மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளான சமூகங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளை அணிதிரட்டுவது ஆகிய விடங்கள் குறித்து அரசாங்கங்களுடனான உரையாடல் அல்லது பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அத்துடன் ஆணையாளரை நியமிக்கும் செயல்முறையானது, தகுதியான வேட்பாளரை அடையாளம் காணவும் அவர்களின் நியமனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதும் முக்கியமானதாகும்.
இந்த செயன்முறையானது, உலகெங்கிலும் உள்ள சுதந்திரமான மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுடன் பரந்த மற்றும் அர்த்தமுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
மனித உரிமைகள் முதன்மை மதிப்புகள், சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்பதோடு, அடுத்த ஆணையாளர் உலகம் முழுவதிலும் மனித உரிமைகளுக்கான கட்டாயத் தலைவராக இருப்பது இன்றியமையாதது.
எங்கள் பங்கிற்கு, உலகெங்கிலும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஆணையாளரின் கொள்கை மற்றும் நல்லெண்ண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கிறோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.