நாட்டுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு தேசிய அரசாங்கம்தான். பொருளாதார நெருக்கடி போன்ற நிலைமைகளின்போது உலகின் உயர்ந்த ஜனநாயகங்கள் அவ்வாறான தேசிய அரசாங்கங்களைத்தான் உருவாக்கின.ஆனால் இலங்கைத்தீவின் ஜனநாயகம் அத்துணை செழிப்பானது அல்ல. இலங்கைத்தீவில் தேசிய அரசாங்கம் அல்லது அதைவிட குறைவாக சர்வ கட்சி அரசாங்கம் போன்ற உரையாடல்கள் எப்பொழுது தொடங்குகின்றன என்றால், அரசாங்கம் தன் தோல்வியை ஏனைய கட்சிகளின் தலையில் சுமத்திவிட எத்தனிக்கும் பொழுதுதான்.அதாவது தோல்விக்கு எதிர்க்கட்சிகளை பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமாகத்தான் சர்வ கட்சி அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக தேசிய அரசாங்கம் என்பது தமிழ் நோக்கு நிலையில் சிங்கள பௌத்த தேசிய அரசாங்கமாக அமைய முடியாது. அது சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய மூவினத்தவரையும் பிரதிபலிக்கும் ஒரு பல் தேசிய அரசாங்கமாக அமைய வேண்டும். ஆனால் இலங்கைத் தீவு அதற்குரிய ஜனநாயகச் செழிப்பைக் கொண்டிருக்கவில்லை.
பொருளாதார நெருக்கடி மோசமான வளர்ச்சியை அடைந்த பொழுது கோத்தா ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கத் தயங்கினார். ஏனென்றால் அவர் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கே தலைமை தாங்கினார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கத் தேவையான மனவிரிவும் ஜனநாயகச் செழிப்பும் தாமரை மொட்டுக் கட்சியிடம் இருக்கவில்லை.இது முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம் கோத்தாவை நம்பி எந்த ஓர் இடைக்கால ஏற்பாட்டிலும் அரசியல் பங்காளியாக மாற சஜித் தயாராக இருக்கவில்லை. அது அவருடைய தலைமைத்துவத்தில் உள்ள பலவீனம். கடந்த சுமார் 4 மாத கால அரசியலில் ராஜபக்சக்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது மட்டும் நடக்கவில்லை. சஜித் பிரேமதாசவின் இயலாமையும் வெளிப்பட்ட ஒரு காலகட்டம் அது. கோத்தா அழைத்த போதும் சஜித் துணிந்து முன் சென்று ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கவில்லை. அதேசமயம் அரகலயவுக்கு தலைமை தாங்கவும் அவரால் முடியவில்லை.அவர் ரிஸ்க் எடுக்கத் தயங்கிய ஒரு வெற்றிடத்தில்தான் ரணில் விக்கிரமசிங்க கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேறினார். எனவே ரணிலுக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அனைத்தும் சஜித் பிரேமதாசவின் இயலாமையின் விளைவுகள் என்று கூடச் செல்லலாம்.
மூன்றாவது காரணம், தமிழ்,முஸ்லிம் கட்சிகள் பல்லினத்தன்மைமிக்க ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை பெருமளவுக்கு கொண்டிருக்கவில்லை. இவ்வாறான ஒரு பின்னணியில் கோத்தா ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்க தயங்கினார். மாறாக ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கத் தயாராக காணப்பட்டார்.
அவருக்கு பின்வந்த ரணில் விக்கிரமசிங்கமும் அப்படித்தான். அவரும் ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்க முடியாதவராகக் காணப்படுகிறார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்க முடியாத சிங்கள தலைவர்கள் அது காரணமாகவே சர்வ கட்சி அரசாங்கம் என்ற அடுத்த நிலைக்கு வருகிறார்கள். ஆனால் இப்போதுள்ள நிலைமைகளின்படி அப்படி ஒரு சர்வகட்சி அரசாங்கத்தைக்கூட உருவாக்க ரணில் விக்ரமசிங்கவால் முடியாது என்று தோன்றுகிறது. அதற்கு பின்வரும் காரணங்களை கூறலாம்.
முதலாவது காரணம், மெய்யான பொருளில் ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்க அவர் தயாரில்லை. ஏனென்றால் அவர் தாமரை மொட்டில் தங்கி இருப்பவர். நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உரிய காலம் வரும் வரையும் அவர் தாமரை மொட்டுடன் சுதாகரிக்க வேண்டும். அதற்கு பின்னர்தான் அவர் தாமரை மொட்டோடு ஒருவித பேரத்துக்கு போகமுடியும்.எனவே அதுவரையிலும் அவர் தாமரை மொட்டை அனுசரித்தே போவார்.
இரண்டாவது காரணம், அவரோடு சேர்ந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்க சஜித் பிரேமதாச தயாராக இல்லை. ஏனெனில் ரணில் விக்ரமசிங்கவின் இரண்டாவது இலக்கு, யார் என்பது சஜித்துக்கு தெரியும். முதலாவது இலக்கு அரகலய. இரண்டாவது இலக்கு சஜித். ரணில் அரகலயவை பெருமளவுக்கு முறியடித்து விட்டார்.அடுத்த இலக்கு சஜித். சஜித்தை தோற்கடித்தால்தான் மறுபடியும் யூ.என்.பியை பலமான ஒரு கட்சியாகக் கட்டியெழுப்பலாம். ஒன்றில் சஜித் ரணிலிடம் சரணடைய வேண்டும். அல்லது ரணில் சஜித்தை தோற்கடிக்க வேண்டும்.எனவே ஓர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் ரணிலை நம்பி இணைந்தால் அவர் தன்னை தோற்கடித்து விடுவார் என்று சஜித் பயப்படுகிறார்.அப்படி பயப்படத் தேவையான ஒரு அனுபவம் ஏற்கனவே உண்டு. 2015 ஆட்சி மாற்றத்தின்போது ரணிலும் மைத்திரியும் இணைந்து ராஜபக்சக்களை தோற்கடித்தார்கள்.ஆனால் ரணில் மைத்திரிக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.மாறாக அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மைத்திரியை எப்படி ஓரங்கட்டலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எப்படி மேலும் பலவீனப்படுத்தலாம் என்றுதான் ரணில் சிந்தித்தார். அதுதான் மைத்திரி ஒரு கட்டத்தில் தன் பழைய எஜமானர்களிடமே திரும்பிச் செல்லக் காரணம்.எனவே ரணிலை நம்பி ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் தயாரா என்ற கேள்விக்கு விடை முக்கியம்.
இவ்வாறான ஒரு பின்னணிக்குள்தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னிருந்து இன்று வரையிலும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்க முடியாதவராகக் காணப்படுகிறார்.
இது விடியத்தில் தனக்குள்ள வரையறைகளை அவர் விளங்கி வைத்திருக்கிறார். ஓர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதை விடவும் ஏனைய கட்சிகளை உடைத்து எப்படித் தன்னுடைய ஸ்தானத்தை பலப்படுத்தலாம் என்றுதான் அவர் சிந்திப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக சஜித் அணிக்குள் இருப்பவர்களை எப்படி உருவி எடுக்கலாம் என்றுதான் அவர் சிந்திப்பார். நிறைவேற்று அதிகாரம் உடைய ஒரு ஜனாதிபதியாக அதைச் செய்யத் தேவையான வளங்களை அவர் கொண்டிருக்கிறார்.எனவே வெளித்தோற்றத்துக்கு ஓர் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு தயார் என்று காட்டிக் கொண்டு திரைமறைவில் சஜித்தை எப்படித் தனிமைப்படுத்தலாம் என்று அவர் சிந்திப்பார்.அது.அவருடைய இரண்டாவது இலக்கு.
மூன்றாவது இலக்கு,தாமரை மொட்டுடனான தங்குநிலையில் இருந்து விடுபடுவது.நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைக்கும்பொழுது முதற்கட்டமாக அது நிறைவேறும்.ஏனென்றால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால்,பிறகு நடக்கும் ஒரு தேர்தலில் தாமரை மொட்டு இப்போது வைத்திருக்கும் பெரும்பான்மை பெறுவது கடினம் என்று அக்கட்சி அஞ்சுகிறது.அது ரணிலுக்குத் தெரியும்.தாமரை மொட்டு வெல்லும் வாய்ப்புகள் குறைவு என்பதால் உடனடிக்கு ஒரு பொதுத் தேர்தலை சந்திக்க தாமரை மொட்டு தயார் இல்லை. எனவே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அந்தக் கட்சி இப்பொழுது தயாராக இல்லை.குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க யாப்பின் பிரகாரம்அடுத்த மார்ச்சில் அந்த அதிகாரத்தை பெறும்பொழுது தாமரை மொட்டு இயல்பாகவே ரணிலின் தயவில் தங்கியிருக்கும் ஒரு நிலைமை வரும். அப்பொழுது ரணிலின் பேரம் மேலும் அதிகரிக்கும்.
தவிர உள்ளூராட்சி சபை தேர்தலை வைத்தால் அதுவும் தாமரை மொட்டுவின் பலவீனத்தை வெளியே கொண்டு வரும்.அதன் மூலம் தாமரை மொட்டை பலவீனப்படுத்தலாம் என்று ரணில் சிந்திக்கமுடியும்.அதனால்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.அதுபோலவே மாகாணசபைத் தேர்தலை நடத்தினாலும் அதுவும் தாமரை மொட்டுக்குப் பாதகமாக மாறும்.இப்போதிருக்கும் நிலைமைகளின்படி எந்த ஒரு தேர்தலை நடத்தினாலும் அது தாமரை மொட்டு கட்சிக்கு 2019 ஆம் ஆண்டின் இறுதியிலும் 2020 ஆம் ஆண்டும் சிங்கள மக்கள் வழங்கிய ஆணை காலாவதியாகிவிட்டது என்பதனை உணர்த்தும் ஒரு தேர்தலாகத்தான் அது அமையும். எனவே அப்படி ஒரு விசப்பரீட்சைக்குப் போவதை எப்படி ஒத்திவைக்கலாம் என்றுதான் தாமரை மொட்டு சிந்திக்கும்.அவ்வாறு சிந்திக்குமிடத்தில் அவர்கள் ரணிலில் தங்கியிருப்பது மேலும் அதிகரிக்கும்.இதுவும் ரணிலின் பேரத்தை அதிகப்படுத்தும்.
எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரணிலின் பேரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள்தான் நாட்டில் அதிகமாகத் தென்படுகின்றன.பொருளாதார நெருக்கடியை அவர் தற்காலிகமாகவேனும் தணித்து வருகிறார் என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாக கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக நின்ற நீண்ட வரிசைகளை இப்பொழுது காண முடிவதில்லை.இந்த மாதம் அரிசித் தட்டுப்பாடு வரலாம் என்று ரணில் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.ஆனால் தட்டுப்பாடு வரவில்லை.அரிசி விலை இறங்கவில்லைத்தான் ஆனால் ஏறவும் இல்லை.சீனாவிடம் இருந்தும் இந்தியாவிடம் இருந்தும் கிடைக்கும் அரிசியின்மூலம் ரணில் நெருக்கடியில் இருந்து தப்ப முயற்சிக்கக்கூடும்.
அனைத்துலக நாணய நிதியத்துடனான உரையாடல்கள் எதிர்பார்த்த வேகத்தில் எதிர்பார்த்த வெற்றிகளை பெற்றுத்தரவில்லை.அந்த உரையாடல்கள் பூகோள அரசியல் போட்டிக்குள் சிக்கியிருப்பதாகவே தெரிகிறது. சீனா இலங்கைக்கு வழங்கிய கடனை மீளக் கட்டமைக்க வேண்டும் என்று அனைத்துலக நாணைய நிதியம் கேட்கிறது.ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் சீனா இலங்கைக்கு சாதகமான முடிவுகளை இதுவரையிலும் எடுக்கவில்லை.அனைத்துலக நாணய நிதியத்துடனான உரையாடல்கள் இப்பொழுதும் அதிகாரிகள் மட்டத்திலானவைகளாகவே காணப்படுகின்றன.அதாவது அனைத்துலக நாணய நித்த்திடமிருந்து உடனடிக்கு உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரியவில்லை.
சர்வதேச நாணய நிதியம் ஒரு சர்வரோக நிவாரணி அல்ல. இலங்கைத் தீவு ஏற்கனவே 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம் உடன்படிக்கைகளைச் செய்திருக்கிறது. இதில் ஏழு தடவைகள் அந்த உடன்படிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்று வெரிட்டே ரிசர்ச் இன்ஸ்ரிரியூட்டின் இயக்குனரான கலாநிதி நிஷான்.டி மெல் தெரிவிக்கிறார்.சர்வதேச நாணய நிதியத்துக்காக காத்திருப்பதற்குமப்பால் இலங்கைத் தீவு அதன் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று அவர் கூறுகிறார்.அதற்கு நாட்டில் முதலாவதாக அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும்.இரண்டாவதாக, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு தலைமை கட்டி எழுப்பப்பட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க இந்த இரண்டையும் பூர்த்தி செய்ய முடியாதவராகக் காணப்படுகிறார்.ஓர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தின்மூலம் அவர் ஒப்பிட்டுளவில் அதைச் செய்யலாம். நிச்சயமாக எதிர்க்கட்சிகளைப் பிரித்து ஆள்வதன் மூலம் அல்ல.