சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களோடு சமாந்தரமாக பிரதான கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கும் போது உயர்மட்ட கடன் வழங்குனர்களில் ஒன்றாகவுள்ள சீனாவின் நிலைப்பாடு குறித்து பகுப்பாய்வு செய்வது மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது.
நாட்டின் கடன் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான பாதையில், இலங்கையுடன் சீனா எவ்வாறான வெளிப்பாடுகளைச் செய்கின்றது என்பது, நாட்டின் கடன் மறுசீரமைப்பினுடைய பாதை மற்றும் அதற்கான காலம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இலங்கையின் இக்கட்டான நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் வழங்கிய நேர்காணலில், நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில், இலங்கை (சீனாவுடன்) கடன் மறுசீரமைப்பில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.
பொருளாதார சிக்கலில் உள்ள மற்ற நாடுகளில் கடன் நிவாரணம் அல்லது மறுசீரமைப்பு ஆகிய விடயங்கள் குறித்து அவதானிக்கின்றபோது, சீனாவின் அணுகுமுறையானது, ஏனைய கடன் வழங்குபவர்களிடமிருந்து கணிசமாக வேறுபட்டுள்ளதால், அந்த விடயம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமுள்ளது.
இவ்வாறான அனுபவங்களின் அடிப்படையில், இலங்கையும் சீனாவும் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதோடு, சீனா தனது மறுசீரமைப்புக்கான விருப்பமின்மையை தொடரலாம் என்றும் எதிர்பார்ப்பதும் இயற்கையானது.
உண்மையில், சாம்பியாவின் கடன் மறுசீரமைப்புக்கான சமீபத்திய அணுகுமுறையானது, அந்த நாட்டில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக அமைகின்றது. எனினும் அந்த நாடு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு பிரான்ஸுடன் இணைந்து கடன் வழங்குநர் குழுவின் இணைத் தலைவரும் பங்கேற்றுள்ளார். இந்த முறைமையானது, இலங்கையின் முயற்சிகளுக்கு சாதகமான குறிகாட்டியாக இருக்கலாம்.
வெளிநாட்டு கையிருப்பு, இறக்குமதிக்கான வாய்ப்புக்கள் தொடர்ச்சியாக குறைந்து வருவதால், நெருக்கடிகள் நீடிக்கின்றன. பாரிய கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், இலங்கை அரசாங்கம் ஏப்ரல் 12ஆம் திகதி அன்று ஒருதலைப்பட்சமாக கடன்வழங்குவதை நிறுத்துவதாக அறிவிப்புச் செய்தது.
உலகநாடுகளின் பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளுக்கான நிதி செலுத்துதல்களைத் தவிர்ப்பதாக குறிப்பிட்ட இலங்கை சில காலத்திற்கு அந்தச் செயற்பாட்டை நீடிக்கப்போவதாகவும் அறிவித்தது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவி பெறுவது பற்றிய விவாதங்கள் அதன் பின்னர் தொடர்ந்தன. இருப்பினும் பணியாளர்கள் அளவிலான உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.
இருந்தாலும் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பதற்கு போதுமான நிதி உத்தரவாதங்கள் இருத்தல் அவசியமாகின்றது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரர்கள் இலங்கை கடன்களை வழங்குவோரை நியாயமாக நடத்துவதில் நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே நிறைவேற்றுக்குழு சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
குறிப்பாக, தனது நிபந்தனைகள் அடங்கிய வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்து இலங்கைக்க மேலதிக கொடுப்பனவுகளை செய்யும்.
இந்தச் செயற்பாடு இடம்பெறும் வகையில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பிற பலதரப்புகளும் இலங்கைக்கு கூடுதல் பணத்தைக் கடனாக வழங்குவதைத் தவிர்த்துக்கொண்டே இருக்கும்.
அதேநேரம், இலங்கை தனியார் கடன் வழங்குநர்களுடன் (சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மற்றும் வணிகக் கடன்களை வைத்திருப்பவர்கள்) அத்துடன் ஜப்பான், சீனா மற்றும் இந்தியா போன்ற இருதரப்புக் கடனாளர்களுடன் கூடிய விரைவில் இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு விவாதங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்னேற்றத்தை அடைய வேண்டும்.
மே 24 அன்று, இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு நிதி மற்றும் சட்ட வல்லுனர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகியோரை நாட்டின் முக்கிய கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பின் விதிமுறைகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆட்சேர்ப்பு செய்துள்ளது.
எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இலங்கையின் இருதரப்பு மற்றும் தனியார் கடனாளிகளுடன் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக நியாயமான மற்றும் விரைவான கடன் மறு பேச்சுவார்த்தை நடைமுறையில் தங்கியுள்ளது.
இலங்கையின் மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் உட்பட) 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் 81 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அரசாங்கத்தின் வட்டிக் கொடுப்பனவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்தை நெருங்கும். இந்த நிலைமை உலகிலேயே மிக உயர்ந்ததாகும்.
பல்வேறு வகைக் கடன்களில் சரியாக வகைப்படுத்தப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்த ஒட்டுமொத்தக் கடன் தொகை குறைத்து மதிப்பிடப்படலாம் (உதாரணமாக, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் எடுக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் பொது உத்தரவாதக் கடன்).
சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள், இலங்கை அபிவிருத்திப் பத்திரங்கள் மற்றும் சில சிண்டிகேட் என்று தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கை சுமார் 12.3 பில்லியன் டொலர்கள் கடனைப் பெற்றுக்கொண்டுள்ளது.
வருடாந்திர வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகள் 2009இல் 1.3 பில்லியனிலிருந்து 2020இல் 4.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், 9 பில்லியன் டொலர்கள் பல தரப்புக்களுக்கு செலுத்த வேண்டிய கடன்களாக நிலுவையில் உள்ளது. 5 பில்லியன் டொலர்கள் சீனாவிற்கும் 3.5 பில்லியன் டொலர்கள் ஜப்பானுக்கும் செலுத்த வேண்டியுள்ளது.
5.6 பில்லியன் டொலர்கள் சீனாவைத் தவிர ஏனைய இருதரப்புக் கடன் வழங்குபவர்களுக்கு, செலுத்த வேண்டியுள்ளது. இலங்கையின் முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களில் ஜப்பான் மட்டுமே ஷபாரிஸ் கிளப்| கடனளிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியாவுக்கு பார்வையாளர் அந்தஸ்து உள்ளது, சீனா உறுப்பினராகக் கூட இல்லை.
எவ்வாறாயினும், ஜி-20 இல் உறுப்பினராக உள்ள சீனா, கடன்-சேவை இடைநீக்க முன்முயற்சிக்கு அப்பாற்பட்ட கடன் மறுசீரமைப்புக்கான பொதுவான கட்டமைப்பிற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கையின் மொத்த மத்திய அரசாங்கக் கடனில் 6.2 சதவீதத்தை சீனா வைத்திருக்கிறது. சீன மத்திய அரசாங்கக்கடனாக தோராயமாக 670 மில்லியன் டொலர்கள் காணப்பட்டாலும் பெரும்பான்மையான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களான சீன அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றுக்கு 7பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடன்கள் காணப்படுகின்றன.
இந்தக் கடன்கள் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள், மாநாட்டு மையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சீனக் கடன்களின் மதிப்பு பற்றிய சிக்கல்கள் முந்தைய தசாப்தம் முழுவதும் நீடித்தன.
வெளிநாட்டு வணிகக்கடன் வழங்குபவர்கள் சீனாவின் இருதரப்புக் கடனின் ஆதரவுடன் குறைந்த வருமான முதலீடுகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, சீனக் கடன்களை அரசாங்கம் திருப்பிச் செலுத்துவதற்கு உதவுவதற்காக அவர்கள் இலங்கைக்கு தங்கள் கடன்களைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ளதுள்ளார்கள்.
இதன் விளைவாக, சீனாவுடனான கடன் மறுசீரமைப்பானது புதிதாக கடன் வழங்குபவர்களுக்கு மிக முக்கியமான விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் உலகளாவிய கடன் விவாதங்களில் பங்கேற்க சீனா இன்னும் வெளிப்படையாக உறுதியளிக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். இதுவரை, அதன் அணுகுமுறை தெளிவற்றதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-யே.பெனிற்லஸ்-