நெதர்லாந்தில் லொறி ஒன்று பள்ளத்தில் இருந்து விலகி பார்பிக்யூ விருந்தில் கலந்துக்கொண்டவர்கள் மீது மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
ரோட்டர்டாமுக்கு தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் மருத்துவமனையில் உள்ளனர். இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்த விபத்தின் போது, 28 முதல் 75 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நியுவ்-பெய்ஜர்லாந்த் கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடந்த விபத்தை ஏற்படுத்தியதாக 46 வயதான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், டச்சு தனியுரிமைச் சட்டங்களின்படி அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை. விபத்தின் போது ஓட்டுநர் குடிபோதையில் இருக்கவில்லை என பொலிஸ்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஒரு டுவீட்டில், ‘விபத்து குறித்து தாங்கள் அதிர்ச்சியடைந்ததாக கூறினர்.
‘இந்த நெருங்கிய சமூகத்தில் இந்த விபத்து நினைத்துப் பார்க்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எங்கள் எண்ணங்களில் உள்ளன, காயமடைந்தவர்கள் அவர்களின் வழியில் வலிமை பெற வாழ்த்துகிறோம்’ என குறிப்பிட்டனர்.
பிரதமர் மார்க் ரூட்டே ஒரு ட்வீட்டில், ‘இந்த பயங்கரமான நாடகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அடுத்த உறவினர்களுக்கும் எனது எண்ணங்கள் செல்கிறது. அவர்களுக்கு அதிக பலம் கிடைக்க வேண்டுகிறேன்.’ என கூறினார். உள்ளூர் மேயர் சார்லி அப்ரூட் சனிக்கிழமை இரவு சம்பவ இடத்தை பார்வையிட்டார்.