பெல்ஜியன் பர்முயுலா-1 கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’ கார் பந்தயத் தொடர், 23 சுற்றுகளாக ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுகின்றது.
இதன்படி, நடப்பு ஆண்டின் 14ஆவது சுற்றான பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.
இதில் 308.052 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 19 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 25 நிமிடங்கள் 52.894 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 26 புள்ளிகள் வழங்கப்பட்டது.
அவரை விட 17.841 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ், இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.
இவரையடுத்து 26.886 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, பெர்ராரி அணியின் கார்லோஸ் செய்ன்ஸ், மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 சுற்றுகளின் முடிவில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், 9 சம்பியன் பட்டங்களுடன் 289 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ், ஒரு சம்பியன் பட்டத்துடன் 191 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க், 3 சம்பியன் பட்டங்களுடன் 186 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின் 15ஆவது சுற்றான நெதர்லாந்து கிராண்ட் பிரிக்ஸ், அடுத்த மாதம் 4ஆம் திகதி ஸென்ட்வூர்ட் கிராண்ட் பிரிக்ஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.