பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சி மீது நடந்து வரும் ஒடுக்குமுறைக்கு அந்நாட்டின் இராணுவமே காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது அந்த நாட்டில் பதற்றத்தை அதிகரித்து, பாரிய அளவிலான அமைதியின்மை அபாயத்தை எழுப்பியுள்ளது.
மே 25 அன்று, பொலிஸார் எங்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியபோது, பொலிஸாருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவிடப்பட்டதாக என்னிடம் சொன்னார்கள், அதாவது பி.டி.ஐ உறுப்பினர்களை தாக்கும்படி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் பொலிஸாரினால் பி.டி.ஐ தலைவர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரான கில், பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பின்னர், அக்கருத்துக்கள் ‘மிகவும் வெறுக்கத்தக்க மற்றும் தேசத்துரோகமாக’ கருதப்பட்டு கடந்த ஒன்பதாம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்
இந்நிலையில், ஷாபாஸ் கில் சித்திரவதை செய்யப்பட்டதற்கு இஸ்லாமாபாத் பொலிஸார் பொறுப்பல்ல. பாகிஸ்தானில் ஏதேனும் தவறு நடந்தால், அதற்கு இராணுவம் தான் பொறுப்பாளிகள் என்றும் இம்ரான் கான் கூறினார்.
இதேவேளை, தலைநகரின் நீதிமன்றின் கூடுதல் அமர்வு நீதிபதியை அச்சுறுத்தியதாக இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் கூட்டணி அரசாங்கத்திற்கும் முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என்ற அச்சுறுத்தலுக்கு மத்தியில், இம்ரான் கானை கைது செய்ய அரசாங்கம் முயற்சித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என பி.டி.ஐ பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமன்றி, அவர் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பல ஆதரவாளர்கள் இம்ரான் கானின் ‘பானிகாலா’ இல்லத்தின் முன்னாள் அணிதிரண்டனர்.
பி.டி.ஐ தலைவர் ஃபவாத் சவுத்ரி, இம்ரானின் ‘பானிகாலா’ இல்லத்திற்குச் செல்லுமாறு தனது கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்,
செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு மூத்த பி.டி.ஐ தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி, இம்ரான் கைது செய்யப்பட்டால், கட்சியினரின் போராட்டத்திற்கு தயாராக இருக்குமாறும், காத்திருங்கள் என்றும் தங்கள் கட்சி ஆர்வலர்களிடம் கூறியதாக தெரிவித்தார்.
ஏதேனும் விரும்பத்தகாத நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதன் விளைவுகளுக்கு ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஆசிப் அலி சர்தாரி பொறுப்பு என்று குரேஷி எச்சரித்தார்.
‘அரசியலமைப்பு மற்றும் சட்ட வரம்புகளுக்குள் நாங்கள் எங்கள் அரசியல் போராட்டத்தை தொடர வேண்டும்,’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் அவர் கடுமையான விளைவுகளை தற்போதைய அரசாங்கத்தை எச்சரித்தார்.