‘வின்பொக்ஸ்’ எனப்படும் வியட்நாம் – இந்தியா இருதரப்பு இராணுவப் பயிற்சி சண்டிமந்திரில், நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்போது, பேரிடர் நிவாரணத்தில் பல்முகவரக மனிதாபிமான உதவி, மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் ஆகிய முன்முயற்சிகளைக் காண்பிக்கும் உபகரணக் காட்சியும் இடம்பெற்றிருந்தது.
இந்தப் பயிற்சியின்போது, ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இராணுவ பொறியாளர் மற்றும் மருத்துவ குழுக்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது என பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
வியட்நாம் மக்கள் இராணுவம் களப் பயிற்சியை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
எந்தவொரு வெளிநாட்டு இராணுவத்துடனும் கூட்டுப்பயிற்சி செய்யாத வியட்நாம் தனது கூட்டுப்பயிற்சிக்காக இந்திய இராணுவத்தினை முதற்தடவையாக தெரிவு செய்திருந்தது.
இந்தத் தெரிவானது, இரு நாடுகளும் தங்கள் பரஸ்பர உறவின் மீது எவ்வளவு மதிப்பை வைத்திருக்கின்றன என்பதைப் பறைசாற்றுவதாக உள்ளதென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளது.
மூன்று வார காலப்பகுதியில், இருபடைகளின் வீரர்களும் புரிந்துணர்வுடன் பல விடயங்களை கற்றுக்கொண்டதோடு, சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொண்டனர்.
இரு நாடுகளைச் சேர்ந்த குழுக்களும், முதலில் கோட்பாட்டு வகுப்புகளைத் தொடர்ந்து நடைமுறைப் பயிற்சிகளை மேற்கொண்டன.
இறுதி சரிபார்ப்புப் பயிற்சியானது எண்ணற்ற சவால்களை எதிர்கொள்ளும் தொலைதூர ஆப்பிரிக்க இடத்தில் ஒரு தளத்தை அமைப்பதை மையமாக இருந்தது.
இந்தப் பயிற்சியின் நிறைவு விழாவில் இந்தியாவுக்கான வியட்நாமின் தூதர் பாம் சான் சாவ் மற்றும் வி.பி.ஏவின் உயர்மட்ட பார்வையாளர் குழுவும் கலந்து கொண்டனர்.
இந்தியத் தரப்பில், லெப்டினன்ட் ஜெனரல் நவ் குமார் கந்தூரி, தலைமை தாங்கினார், லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
விழாவில் பேசிய உயரதிகாரிகள் வியட்நாமிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் நலன்களின் ஒருங்கிணைப்பை வலியுறுத்தினர்.
இந்நிலையில் இக்கூட்டு பயிற்சியின் அடுத்த அங்கம் 2023 இல் வியட்நாமில் நடத்தப்படவுள்ளது.
இந்தியாவும் வியட்நாமும் ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்வதோடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்தக் கூட்டாண்மையின் முக்கிய தூணாகும்.
இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் மூலோபாயம் ஆகியவற்றில் வியட்நாம் முக்கிய பங்காளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.