மியன்மாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
நோபல் பரிசு பெற்றவரும் மியன்மாரின் பல தசாப்த கால இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவருமான இவர், கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சதிப்புரட்சிக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டு ஏற்கனவே 17 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை எதிர்கொண்டுள்ளார். ஆனால், அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார்.
கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சி அதிக சட்டமன்ற பெரும்பான்மையுடன் வென்றது. சக்திவாய்ந்த இராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியை வீழ்த்தியது.
ஆனால், ஆங் சான் சூகி தேர்தலில் மோசடி செய்ததாக நேற்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆங் சான் சூகி மீது இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவல்ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன.
இதில் சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அனைத்திலும் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.