டென்னிஸ் உலகின் இரும்புப் பெண் என போற்றப்படும் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
40 வயதான செரீனா, தற்போது நடைபெற்றுவரும் ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிடம் தோல்வியைத் தழுவிய பிறகு ஓய்வு பெற்றார்.
இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தால் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார்.
ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல கடுமையாக முயற்சி செய்துவந்த செரீனாவின் முயற்சி மற்றும் காத்திருப்பு ஏமாற்றத்தில் முடிவடைந்துள்ளது.
மகளிர் டென்னிஸ் உலகில் செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில், (7 அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், மூன்று பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஏழு விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஆறு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்) அடங்கும்.
இதுதவிர 2012ஆம் ஆண்டு ஒம்பிக்கில் சம்பியன் பட்டம் வென்ற செரீனா, ஐந்து முறை டுர் பைன்ஸில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இரட்டையர் மகளிர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார்.
மகளிர் டென்னிஸ் உலகில் என்றும் போற்றக்கூடிய வீராங்கனையான செரீனாவின் ஓய்வுக்கு இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், இரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.