துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேவையான கையிருப்பு மாத இறுதிக்குள் வந்து இங்கு விநியோகம் செய்யப்பட்டவுடன் கோதுமை மாவின் விலை குறைக்கப்படலாம் என மொத்த இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக துருக்கியில் இருந்து மாவை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் நடுப்பகுதியில் ஒருதொகை கோதுமை துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
டுபாயிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகம் என்பதனால் துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி தொடங்கியதும், மாவின் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்ப்பதாக அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஏற்றுமதி தடை மற்றும் உள்ளூர் கோதுமை மா இறக்குமதியாளர்கள் போதியளவு கையிருப்புகளை சந்தைக்கு வெளியிடத் தவறியமையினால் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.