தேசிய பாதுகாப்பு தொடர்பில் சரியான சட்ட அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இணைந்து அமைச்சரவையில் முன்வைத்த இந்தக் கூட்டுப் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நீதி அமைச்சின் செயலாளர் தலைமையில் உரிய குழுவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் பலவீனங்களைக் களைவதற்கும், அத்தகைய நடவடிக்கைகளைக் கையாள்வதற்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் தேவையான பணிகளை இந்த குழு கையாளவுள்ளது.
மேலும், முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தை உருவாக்கும் செயல்முறையின் மூலம், தேசிய பாதுகாப்பு தொடர்பான சரியான சட்ட அமைப்பைத் தயாரிப்பதற்கும், அனைத்து பிரச்சினைகளுக்கும் கவனம் செலுத்துவதற்கும், மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச தரநிலைகள் மற்றும் பரிந்துரைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கும் இந்த குழு பணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விரிவான தேசிய பாதுகாப்பு சட்ட அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான தேவை தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.