இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் வைத்தியர் உட்பட மூன்று அதிகாரிகள் மட்டுமே உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் இணைந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அந்தப்பிரிவு தெரிவித்துள்ளது.
முதல் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்க தனது தனிப்பட்ட செலவில் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டார் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவான் விஜேவர்தனவும் ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற புலம்பெயர் இலங்கையர் சந்திப்பில் கலந்துகொண்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் டினூக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் வைத்தியருமே இந்த பயணத்தில் கலந்துகொண்டனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.