படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, தனது தந்தைக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தனது விடாமுயற்சியையும் வாதிடுவதையும் பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் சர்வதேச மனித உரிமைகள் பாரதூரமான மீறலுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என கூறி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, மக்கள் தீர்ப்பாயத்தில் நீதிபதிகளின் தீர்ப்பிற்காக தனது குடும்பத்தினரும் தானும் 13 ஆண்டுகளாக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
உலகளவில், பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையின்மை மோசமாகி வருவதாகவும் மக்கள் தீர்ப்பாயத்திற்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொல்லப்பட்ட தனது தந்தை போன்ற பத்திரிகையாளர்களுக்கு இறுதியாக நீதிமன்றத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் தீர்ப்பாயம் தனது தந்தையின் படுகொலைக்கான ஆதாரங்களை வலுவாகவும் அழுத்தமாகவும் முன் வைத்ததுடன், தனது தந்தைக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்தியதற்கும் கட்டளையிட்டதற்கும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாகக் கண்டறிந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது தந்தைக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.