உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை வரவழைக்கும் ஜனாதிபதி விளாமிடிர் புடினின் முடிவுக்கு எதிராக பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தம் 1,300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய மனித உரிமைகள் குழுவான ஒவிடி- இன்போஃ தெரிவித்துள்ளது.
இர்குட்ஸ்க், பிற சைபீரிய நகரங்கள் மற்றும் யெகாடெரின்பர்க்கில் டசன் கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதனிடையே, விளாடிமிர் புடினின் அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து வெளியேறும் விமானங்களுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்தன. மேலும் கூகிளில், ‘ரஷ்யாவை விட்டு வெளியேறுவது எப்படி’ என்ற தேடலம் உயர்ந்தது.
உக்ரைனில் சமீபத்திய போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்யாவின் படைகளை வலுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி ஜனாதிபதி விளாமிடிர் புடின், சுமார் 300,000 இராணுவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், புடின் ரஷ்ய பிரதேசத்தை பாதுகாக்க கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவேன் என்று வலியுறுத்தினார். இதில் அணுஆயுத தாக்குதல் எச்சரிக்கையும் அடங்கும்.
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்புகளை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.