வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பது தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதில் முழு உறுதியுடன் இருப்பதாக கூறியுள்ளது.
இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி ஆற்றிய உரையில், ‘அணுசக்தி ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதில் நாங்கள் முழு உறுதியுடன் உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை, இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. ஆனால், இதுதொடர்பாக நாடுகள் அளிக்கும் உறுதிமொழிகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக உள்ளது.
குறிப்பாக, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டு, பின்னர் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. எனவே, போதிய உத்தரவாதம் இல்லாமல் அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதிகள் நம்பிக்கைக்குரியவையாக இருக்குமா என்பது சந்தேகமே’ என கூறினார்.
ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.
எனினும், அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமுல்படுத்தினார்.
அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஈரான், அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை படிப்படியாக மீறி வருகிறது.
இதன் காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை தக்கவைக்க, தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.