தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதைத் தேர்தல்கள் ஆணைக்குழு தாமதப்படுத்தாது என அதன் தலைவர் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இளைஞர் பட்டியலை இணைத்து, உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதியை நவம்பரில் அறிவிக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரிக்குள் 18 வயதை நிறைவு செய்யும் இளைஞர்களின் புதிய விண்ணப்பங்களை வருடாந்த வாக்காளர் பதிவேடுக்கான துணைப் பட்டியலில் இணைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான பொதுவான வாக்காளர் பதிவேட்டை ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் புதிய வாக்காளர் பட்டியலுடன் இறுதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பெப்ரவரி முதல் செப்டம்பர் வரை 18 வயது பூர்த்தியான புதிய விண்ணப்பதாரர்களின் மற்றுமொரு பட்டியலைத் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த பட்டியல் உட்பட 2022 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் நடுப்பகுதியில் தயாராகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நவம்பர் மாத இறுதியில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் நிலையில் இருக்கும் என புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.