உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்காலப் போர்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன், அவசரகால கொள்முதல் நடைமுறைகளின் கீழ் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து துப்பாக்கிகள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பல ஆயுதங்களை வாங்குவதற்கு இந்திய இராணுவம் பல கேள்விப்பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
‘இந்தியப் பாதுகாப்புத் துறையின் அவசரகால கொள்முதல் செய்வதற்கான திட்டத்தின் கீழ் முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நாங்கள் அறிவிப்பு விடுத்துள்ளோம்.
துப்பாக்கிகள், ஏவுகணைகள், ட்ரோன்கள், எதிர்-ட்ரோன், லோட்டர் வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள், சிறப்பு வாகனங்கள், பொறியியல் உபகரணங்கள் மற்றும் மாற்று எரிசக்தி வளங்கள் ஆகியவற்றுக்கான கேள்விப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன’ என இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்முறை குறுகிய காலத்தினை அடிப்படையாகக் கொண்டது, இதில் கொள்முதலானது ஆறு மாதங்களுக்கானது.
இந்திய தொழில்துறைக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு வருடத்திற்குள் சாதனங்களை அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவசரகால கொள்முதல் அதிகாரத்தின் கீழ், ஆயுதப்படைகளின் மூலதன கொள்முதல் திட்டத்திற்கு அமைவாக, 300 கோடிக்கும், வருமான கொள்முதலின் கீழாக கீழ் 500 கோடிக்கும் உபகரணங்களை வாங்கமுடியும் எனவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொள்முதல் செய்வதற்கான அனுமதி நரேந்திர மோடி அரசாங்கத்தால் கடைசியாக நடத்தப்பட்ட பாதுகாப்பு சபைக் கூட்டத்தின் போது மூன்று சேவைகளுக்கு வழங்கப்பட்டது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட எந்த ஆயுக் கட்டமைப்பையும் படைகளின் விருப்பப்படி கொள்வனவு செய்வதற்கு ஆறு மாத கால அவகாசத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், கடந்த காலத்தில் படைகள் வெளிநாட்டு விற்பனையாளர்களுடன் நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்வதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருந்தன, மேலும் பல ஒப்பந்தங்கள் மே 2020 இற்கும் பின்னர் கையெழுத்திடப்பட்டன.
இதில் ஹெரான் ட்ரோன்கள், ஸ்பைக் எதிர்ப்பு, வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் படைகளின் பல முக்கியமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.