போரில் உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில், ரஷ்யா வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உக்ரைனின் லுஹான்ஸ்க், கெர்சன் பகுதிகளை இணைத்துக் கொள்ளுமாறு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்தப் பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட மேற்கத்திய நாடுகளால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அழைப்பை பிராந்தியத் தலைவர்கள் விடுத்துள்ளனர்.
பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்ட மற்ற இரு ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் பிரதேசங்களின் தலைவர்களும் இதே போன்ற கோரிக்கையை விரைவில் விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 நாட்கள் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸபோரிஸியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டோனெட்ஸ்க்கில் 99.23 சதவீதமும், ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை புடின் இன்ற வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.