தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
திருவானந்தபுரத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மஹாராஜ் 41 ஓட்டங்களையும் மார்கிரம் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா மற்றும் என்ரிச் நோக்கியா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இந்திய அணி சார்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஸ்தீப் சிங் தெரிவுசெய்யப்பட்டார்.