தற்போதைய சூழ்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் திட்டமிடவில்லை என வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பிரென்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 92 டொலருக்கும் குறைவாகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் விலை 86 டொலராகவும் சரிந்தது.
அதன்படி, செவ்வாயன்று (10) ஆரம்ப வர்த்தகத்தில் பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 91.61 டொலருக்கும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 85.81 டொலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டன.
திங்களன்று இவற்றின் விலை 7 சதவீதம் சரிந்திருந்தது.
ஈரான் யுரேனியத்தை சுமார் 4 சதவீதம் வரை செறிவூட்ட அமெரிக்கா அனுமதி அளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஈரான் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்றும் வெளியான செய்திகளே இந்த விலை சரிவுக்குக் காரணமாக அமைந்தன.
இருப்பினும், இந்தத் தகவல்கள் இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், ஹவுத்திகள் சவூதி எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து குறிவைத்து வருகின்றனர்.
இதில் மிக அண்மைய தாக்குதல் மீண்டும் ‘கிழக்கு-மேற்கு’ குழாய்த்தொடர் (East-West pipeline) மீது நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் ஒரு சிறிய அளவிலான தீப்பரவல் ஏற்பட்டது, அது பின்னர் அணைக்கப்பட்டதாக சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இந்த வாரமும் தொடர்ந்தன.
இருப்பினும், அந்தப் போர் குறித்த சாதகமான செய்திகளில் கவனம் செலுத்திய எண்ணெய் வர்த்தகர்கள், இந்தத் தாக்குதல்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் ஒரு பீப்பாய் 118 டொலர் என்ற உச்ச விலையை எட்டியிருந்த ப்ரெண்ட் மசகு எண்ணெய், தற்போது அந்த உச்ச விலையிலிருந்து 22% சரிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் இறுதியில் இருந்த அந்த விலை, கடந்த ஆறு மாதங்களில் ப்ரெண்ட் மசகு எண்ணெய்க்கான மிக உயர்ந்த விலையாக இருந்தது.
எண்ணெய் சந்தைக்கு மேலும் சரிவை ஏற்படுத்தும் செய்தியாக, ஒக்டோபர் மாதத்தில் ஒபெக் (OPEC) அமைப்பின் உற்பத்தி நாளொன்றுக்கு 1.38 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்து, மொத்தம் 22.87 மில்லியன் பீப்பாய்களை எட்டியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இது பெப்ரவரி மாத சராசரியான நாளொன்றுக்கு 25.48 மில்லியன் பீப்பாய்களை விடக் குறைவுதான் என்றாலும், இந்த இடைவெளி தற்போது குறைந்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உற்பத்தியை அதிகரிப்பதாக OPEC+ உறுதியளித்திருந்தது.
ஆனால், ஈரானில் நிலவும் போர்ச் சூழலால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த அமைப்பின் ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள உறுப்பு நாடுகள், 2026 ஆகஸ்ட் மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 25 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்தன.
இது 31.01 மில்லியன் பீப்பாய் என்ற ஒட்டுமொத்த இலக்கை விடக் குறைவானதாகும்.
மேலும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான உற்பத்தி ஒதுக்கீடுகளை அந்த அமைப்பு மாற்றமின்றி அப்படியே வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














