கப்பல் நிறுவனத்திடம் பணம் தீர்ந்துபோனதால் கம்போடியாவில் பயணிகள் சிக்கிக்கொள்ள நேரிட்ட ஒரு சொகுசு கப்பல், ஞாயிற்றுக்கிழமை (08) சிங்கப்பூர் சென்றடைந்த நிலையில், அந்நாட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
உலகத்தைச் சுற்றித் தொடர்ச்சியான பயணத்தை மேற்கொள்ளவிருந்த ‘ஒடிஸி’ (Odyssey) கப்பல், கம்போடியாவிலிருந்து சிங்கப்பூரை சென்றடைந்ததைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த அதன் இயக்குநரான ‘வில்லா வீ ரெசிடென்சஸ்’ (Villa Vie Residences) நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியதைத் தொடர்ந்து, கம்போடியாவின் சிஹானுக்வில் (Sihanoukville) துறைமுகத்தில் சுமார் 200 பயணிகள் கப்பலிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.
சிங்கப்பூரின் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அந்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அது குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
கப்பல் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களின் நலனுக்கான ஏற்பாடுகளைக் கப்பலின் கடன் கொடுத்தவர்கள் கவனித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் பயணிகள் யாரும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கப்பல் தற்போது சிங்கப்பூர் துறைமுகப் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது என்பதையும் அந்த அமைப்பு உறுதிப்படுத்தியது.
இந்தக் கப்பல் தனது திட்டமிடப்பட்ட பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் சிஹானுக்வில்லையை (Sihanoukville) சென்றடைந்தது.
இருப்பினும், ‘வில்லா வீ ரெசிடென்சஸ்’ (Villa Vie Residences) நிறுவனம் தனது கப்பல் பயணச் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதன் விளைவாக, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உலகைச் சுற்றும் பயணம் திடீரென முடிவுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















