ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது
இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், ‘இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பெப்ரவரி 2017இல், தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்ட இலங்கை இராணுவ கற்பழிப்பு முகாம்கள் பற்றிய விபரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், இலங்கை அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.