முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு நாடாளுமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்த முதல் கட்ட விசாரணை மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் வழங்கப்பட்ட அறிக்கையை அடுத்து குறித்த இரண்டு ஊழியர்களும் பணியிடை நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், குறித்த இரண்டு ஊழியர்கள் தொடர்பிலும் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
உணவுப் பொருட்களை வெளியே கொண்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய இரு ஊழியர்களில் ஒருவர் நாடாளுமன்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளர்.
மற்றைய சந்தேக நபர் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு வரும்போதும், வெளியேறும் போதும் ஊழியர்களின் பயணப் பொதிகளை சோதனைக்கு உட்படுத்துமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள உணவுப் பொருட்கள் வெளியே கொண்டு செல்லப்படுகின்றமை அதிகரித்துள்ளமை காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சில பணியாளர்கள் உணவுப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் நாடாளுமன்றத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதனால் அரசாங்கத்திற்கு வருடா வருடம் பெருமளவு நஷ்டம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.