இரசாயன தட்டுப்பாடு காரணமாக தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
டொலர் பிரச்சினை காரணமாக இரசாயன பொருட்களை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தொல்பொருள் ஆய்வு பணிகளும் தடைபட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தொல்லியல் திணைக்களத்தில் காகித பிரச்சனையால் பல்வேறு அறிக்கைகள் தயாரிப்பதிலும் இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, பல்வேறு நடவடிக்கைகளுக்கு பணியாளர்களை ஈடுபடுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊழியர் பிரச்சினை காரணமாக ஜனாதிபதி மாளிகையில் அழிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, மிக அத்தியாவசியமான நடவடிக்கைகளுக்கு மாத்திரமே டொலர்களை ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.