கடந்த வாரம் திலீபன் தொடர்பான எனது கட்டுரையில் திலீபனின் படம் ஒன்று காணப்பட்டதனால் முகநூல் நிர்வாகம் எனது முகநூல் கணக்கை 24 மணித்தியாலங்களுக்கு கட்டுப்படுத்தி வைத்திருந்தது.எனது நண்பர்கள் பலரும் அவ்வாறு தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தன்னுடைய கணக்கு முடக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு சமூக வலைத்தளமானது திலீபனின் படத்தை தனது சமூகத் தராதரங்களை மீறும் ஒன்றாகக் கருதுகின்றது.இவ்வாறு உலகளாவிய சமூகவலைத்தளம் ஒன்றினால் தடை செய்யப்பட்ட ஒரு படத்துக்குரியவரை தமிழ் மக்கள் எப்படி அஞ்சலித்திருக்கிறார்கள்?
ஒரு நினைவுத் தூபிக்கு முன் அசிங்கப்படும் அளவுக்கு தமிழ் அரசியல் திலீபனின் நாளில்தான் தரம்தாழ்ந்து போனது என்பதல்ல.ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் போதும் இவ்வாறான முரண்பாடுகள் வெளிப்பட்டன.மாவீரர் நாட்களை அரசியல்வாதிகள் கையாளும் விதம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 13 ஆண்டுகளாக நினைவு கூர்தல் களத்தை தமது வாக்கு வேட்டை அரசியலுக்கு பயன்படுத்த நினைக்கும் எல்லா அரசியல்வாதிகளுமே நினைவு கூர்தலை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பது தான் உண்மை.
கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நினைவு நாட்கள் அநேகமானவை வாக்கு வேட்டைக் களங்களாக மாறி வருகின்றன.ஒரு கூட்டுத் துக்கத்தை அரசியல்வாதிகள் கொத்து வாக்குகளாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.இந்த விடயத்தில் நினைவுகூர்தலை அதன் புனிதத்தோடு அனுஷ்டிப்பது என்றால் அதற்கு என்ன செய்யலாம் ? கட்சிசாரா ஒரு பொது ஏற்பாட்டுக் குழுவை உருவாக்க வேண்டும்.வேண்டுமானால் அதில் கட்சி உறுப்பினர்கள் இருக்கலாம். ஆனால் இறுதியிலும் இறுதியாக முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சி சாரா சிவில் கட்டமைப்புக்களிடமே இருக்க வேண்டும்.
ஆனால் இங்குள்ள பாரதூரமான வெற்றிடம் என்னவென்றால் அப்படிப்பட்ட சிவில் கட்டமைப்புகள் எவையும் தமிழ்மக்கள் மத்தியில் பலமாக இல்லை என்பதுதான்.தமிழ்மக்கள் மத்தியில் ஏற்கனவே போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புகள் உண்டு.தூதரகங்களை சந்திக்கும் குடிமக்கள் சமூகங்கள் உண்டு.ஆனால் இவை எவையும் அரசியல்வாதிகளின் மீது அழுத்தங்களை பிரியோகிக்கும் சக்தியில்லாதவை.இதைப் பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொடவின் வார்த்தைகளில் சொன்னால் “அரசியலின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யும் சக்தி மிக்க சிவில் சமூகங்கள்” தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது இல்லை. இந்த வெற்றிடம் காரணமாகத்தான் நினைவு கூர்தலுக்கென்று ஒரு பலமான பொது ஏற்பாட்டுக்குழுவை உருவாக்க முடியாதுள்ளது.
திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு மணிவண்ணன் உருவாக்கிய பொது ஏற்பாட்டுக் குழு ஒப்பீட்டளவில் கட்சி சார்பற்றதுதான்.ஆனால் அதை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரக்குமார் அணி ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த ஏற்பாட்டுக் குழுவை சேர்ந்த சமயப் பிரமுகர்களையும் முன்னாள் இயக்கத்தவர்களையும் அவர்கள் அவமதித்திருக்கிறார்கள். அவர்கள் மறைமுகமாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின்படி அப்பொது ஏற்பாட்டுக் குழுவில் காணப்பட்ட சிலர் கட்சிகளுக்கு சார்பானவர்கள் அல்லது சில நாடுகளுக்கு சார்பானவர்கள் என்று கருதப்படுகிறது.இது, இனிவரும் காலங்களில் மேற்படி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒரு பலமான பொது ஏற்பாட்டுக் குழுவை கட்டியெழுப்பலாமா என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.
கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சிவில் சமூகங்கள் இடைக்கிடை தலைதூக்கி கட்சிகளை ஒருங்கிணைப்பது உண்டு. இதில் குறிப்பிடத்தக்க வெற்றி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிடைத்தது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளை நான்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார்கள். ஆனால் அதன்பின் அவ்வாறான ஒருங்கிணைப்புகளுக்கான வாய்ப்புகள் இல்லாமலே போய்விட்டன. மேற்படி ஒருங்கிணைப்பு முயற்சிகளை முதலில் தொடங்கியது மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம்தான்.பின்னர் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இருவர் அம்முயற்சியில் இணைந்து செயல்பட்டார்கள்.ஆனால் அதன் பின் இப்படி இரண்டு சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்திட்டங்களை முன்னெடுக்கும் நிலைமை குறைந்துவிட்டது.
தவிர சில மாதங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின்போது,தமிழ் சிவில் சமூக அமையம் எனைய சிவில் சமூகங்களோடு இணைந்து எல்லாக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு மெய்நிகர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது.சந்திப்பில் சம்பந்தர்,சுமந்திரன், கஜேந்திரகுமார்,விக்னேஸ்வரன் போன்றோர் பங்குபற்றவில்லை.எனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் குறிப்பிட்ட சிலரே பங்குபற்றினார்கள். பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பங்குபற்றினார்கள்.அந்த மெய்நிகர் சந்திப்பில் துலக்கமான முடிவு எதையும் எடுக்க முடியவில்லை.ஏனென்றால் முடிவெடுக்கும் அதிகாரத்தை பெற்றவர்கள் அங்கே பிரசன்னமாகியிருக்கவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் இனிமேல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் சிவில் சமூகங்கள் ஈடுபடுவதாக இருந்தால் முதலில் சிவில் சமூகங்கள் தங்களை மீளக் கட்டமைக்க வேண்டிய ஒரு தேவை உண்டு. மீளக் கட்டமைத்தல் என்பது எத்தகைய அர்த்தத்தில் என்றால், கலாநிதி உயாங்கொட கூறுவதைப்போல, தமிழ் அரசியலின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யும் அளவுக்கு பலமடைய வேண்டும். தமிழ் சிவில் சமூகங்கள் மக்கள் மத்தியில் அபிப்ராயங்களை உருவாக்கவல்ல வலு மையங்களாக -power source -தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.அவ்வாறு பலமடையவில்லை என்றால் இனிவரும் காலங்களில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் மட்டுமல்ல, நினைவு கூர்தல் தொடர்பான பொது ஏற்பாட்டு குழுக்களை உருவாக்குவது சவால்கள் மிகுந்ததாகவே இருக்கும்.
திலீபனின் நினைவுத் தூபிக்கு முன் நடந்த அசிங்கங்களின் பின்னணியில் இனிவரும் காலங்களில் மாவீரர் நாட்களைக் கட்சிகள் குழப்பலாம் என்ற கவலை பரவலாக எழுந்துள்ளது. எனினும் ஒரு மூத்த அரசியல் செயற்பாட்டாளர் பகிடியாகச் சொன்னார் “மாவீரர் துயிலும் இல்லங்கள் பெருமளவுக்கு அந்தந்த பகுதி ஜமீன்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.எனவே ஜமீன்கள் அதற்குள் ஏனையவர்களை நுழையவிட மாட்டார்கள்” என்று.மேலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் பரவலாக காணப்படுவதனால் அங்கே ஒரு பொதுவான நினைவிடம் என்ற ஒன்று இல்லை.அதனால் அந்த பொதுவான நினைவிடத்திற்கு முன் ஒரு பொதுவான தூபிக்கு முன் உரித்துரிமை கேட்டு மோதும் நிலைமையும் பெருமளவுக்கு தவிர்க்கப்படும்.ஆனால் அடுத்த ஆண்டு மே 18இன் போது இந்தப் பிரச்சினை எழக்கூடும்.
கடந்த சில ஆண்டுகளாக நினைவு கூர்தல் களங்களில் தமிழ் அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும்விதத்தில் இருந்து அரசாங்கம் கற்றுக்கொள்ளுமாக இருந்தால்,இனிவரும் காலங்களில் நினைவுகூர்தலை அரசாங்கம் தடுக்கக்கூடிய நிலைமைகள் குறைவாகவே இருக்கும்.ஏனெனில், கட்டுப்பாடுகள் அதிகரித்தால் கடந்த ஆண்டு திலீபனை நினைவு நாளை சாவகச்சேரியில் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து அனுஷ்டித்தது போன்ற ஒரு நிலைமை உருவாகும்.மாறாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால்,தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் தங்களுக்கிடையே முரண்படும் ஒரு நிலைமை அதிகரிக்கலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்க முடியும்.
ஒரு கூட்டுத் தூக்கத்தை கூட்டு ஆக்கசக்தியாக மாற்ற வேண்டிய மக்கள் கூட் டம் அந்தக் கூட்டுத்துக்கத்தை மறந்து கண்ணீரின் மத்தியில் தள்ளுமுள்ளுப்படும் ஒரு நிலமை தோன்றியது என்பது அரசாங்கத்தை பொறுத்தவரை பெரிய வெற்றி.தமிழ் மக்களைப் பொறுத்தவரை நினைவு கூர்தல் எனப்படுவது துக்கித்து அழும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல. அதற்குமப்பால் கூட்டத் துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்கசக்தியாக மாற்றினால்தான் அது தமிழ் மக்களின் அரசியலில் ஒரு ஊக்க சக்தியாக மாறும்.ஒரு கூட்டு துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்கசக்தியாக, ஊக்க சக்தியாக மாற்ற வேண்டிய ஒரு மக்கள் கூட்டம், நினைவு கூரும் இடத்தில் தங்களுக்கிடையே முரண்படுவது என்பது நீதிக்கான போராட்டத்தை மேலும் பலவீனப்படுத்தக்கூடிய ஒன்று.
சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது அதை விளங்கி வைத்திருக்கிறது. அதனால்தான் நினைவுச் சின்னங்களை அவர்கள் இடித்து அழிக்கிறார்கள். அவர்கள் நினைவுச்சின்னங்களை கண்டு அச்சப்படுகிறார்கள்.நினைவு கூர்தல்களைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.அதனால்தான் ராஜபக்சக்கள் நினைவு கூர்தல்களுக்கு எதிராகச் சட்டத்தடைகளைப் போட்டார்கள்.ஆனால் ரணில் விக்கிரமசிங்க அந்தத்தடைகளை எடுத்துவிட்டார்.அவர் பிரதமராக இருந்தபொழுது 2015ஆம் ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின்படி, நிலைமாறுகால நீதிச் செய்முறைகளுக்குள் நினைவு கூர்தலுக்கான கூட்டுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க நினைவு கூர்தலைத் தடுப்பதில்லை.அது மட்டுமல்ல அவர் ராஜபக்சக்களை விடப்புத்திசாலி.நினைவு கூர்தலைத் தடுக்காமல்விட்டால் தமிழ்மக்கள் தங்களுக்கிடையே மோதும் களங்களில் ஒன்றாக அது மாறக்கூடும் என்பதையும் அவர் சிலவேளை சரியாக கணித்திருந்திருக்கலாம்.