ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சிம்பாப்வே அணிக்கெதிரான பயிற்சி போட்டியில், இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மெல்பேர்ன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், பிரெட் எவண்ஸ், ரியான் பர்ல், ரஸா, மாதேவேரே மற்றும் மில்டன் சும்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெஸ்லி மாதேவேரே 43 ஓட்டங்களையும் மில்டன் சும்பா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மகேஷ் தீக்ஷன மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தனஞ்சய டி சில்வா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.