நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் கடந்த மாதம் அரசாங்கம் அறிவித்த கிட்டத்தட்ட அனைத்து வரிக் குறைப்புகளையும் நீக்குவதாக திறைசேரியின் புதிய தலைவர் ஜெரமி ஹன்ட் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 23ஆம் திகதி லிஸ் ட்ரஸ் அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்’டில், நிறுவனங்களுக்கான வரி உயர்வு, அதிக வருவாய் உடையவர்களுக்கு 45 சதவீத உயர் வரி போன்றவற்றை இரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பின் எதிரொலியாக பிரித்தானிய பொருளாதாரம் நிலைகுலைந்து, டொலருக்கு நிகரான பிரித்தானிய பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.
அதையடுத்து, அதுவரை திறைசேரியின் தலைராக இருந்த க்வாசி க்வார்டெங்கை வெள்ளிக்கிழமை நீக்கிய ட்ரஸ், அந்தப் பொறுப்புக்கு ஜெரிமி ஹன்டை நியமித்தார். இந்த நிலையில் அவர் தனது முதல் நடவடிக்கையாக வரிக் குறைப்புகளை நீக்குவதாக அறிவித்தார்.
மினி- பட்ஜெட்களால் ஏற்பட்ட நிதிக் கொந்தளிப்பை தொடர்ந்து, பிரதமர் லிஸ் ட்ரசுக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவரது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் இப்போது அவரை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்னும் பல கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை அநாமதேய விளக்கங்களில் இருந்து விலகுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.
ஆனால், ட்ரஸ் அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்த விரும்புவதாகவும், தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் கூறினார்.