நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600பேரைக் கடந்துள்ளது என்று நாட்டின் மனிதாபிமான விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கன மழை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 603ஆக அதிகரித்துள்ளது.
அமைச்சின் கூற்றுப்படி, 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது குறிப்பாக மழைக்காலத்திற்குப் பிறகு நாட்டின் தெற்கின் சில பகுதிகளில் பரவியுள்ளது.
200,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
இந்த வெள்ளத்தால் நாட்டின் 36 மாகாணங்களில் 33 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பேரிடர் காரணமாக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனர்.
3.4 லட்சம் ஹெக்டேர் வயல்வெளி பயனற்றுப் போனதால் உணவுப் பற்றாக்குறை அபாயம் நிலவி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில், நைஜீரியாவின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் நைஜர் மற்றும் பெனு நதிகளின் பாதைகளில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு பேரழிவு வெள்ளம் குறித்து எச்சரித்தது. நைஜீரியாவின் மூன்று நிரம்பிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை நாடான கேமரூனில் உள்ள ஒரு அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றியது வெள்ளத்திற்கு பங்களித்ததாக கூறப்படுகின்றது.
நைஜீரியாவின் பல பகுதிகள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அதே வேளையில், சில பகுதிகளில் வெள்ளம் கடந்த 2012இல் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தை விட மிகவும் கடுமையானதாக உள்ளது என கோகியில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் அதற்கேற்ப தயாராகுமாறு பிராந்திய அரசாங்கங்களை நைஜீரியாவின் மனிதாபிமான விவகார அமைச்சர் சாடியா உமர் ஃபாரூக் வலியுறுத்தினார்.
வெள்ள மீட்பு முயற்சிகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அதன் தேசிய வெள்ள அவசரத் தயார்நிலை மற்றும் பதிலளிப்புத் திட்டத்தை நாடு விரைவில் செயற்படுத்தும்.