ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என்ற பெரும் நிறுவனங்களின் உரிமையாளரான உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க், தற்போது பிரபல சமூகவலைதளமான டுவிட்டரை வாங்கியுள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்துக்கு நேற்று (வியாழக்கிழமை) திடீரென சென்ற எலான் மஸ்க், அங்கு நிறுவன ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், தனது புதிய நிறுவனத்தில் பல மாற்றங்கள் கொண்டு வர அவர் முடிவு செய்த அவர், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ( சி.இ.ஓ.,) பராக் அகர்வால் மற்றும் நிதி அதிகாரி நெட் ஜெகல், சட்ட நிர்வாகி விஜயா காடே, பொது ஆலோசகர் சின் எட்ஜெட் ஆகிய 4 முக்கிய அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். பின்னர் அந்த முடிவிலிருந்து பின்வாங்கிய அவர், டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் நிறுவனத்தை தானே வாங்கிக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டுவிட்டர் நிறுவனத்தினை வாங்குவதற்காக முதலீடு செய்தவர்களிடத்தில் எலான் மஸ்க் பணியாளர்களை குறைப்பது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. அதில், தற்போது உள்ள 7500 பணியாளர்களில் 75 சதவீதத்தைக் குறைத்து குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து நிறுவனத்தை நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.