இத்தாலிய நகரமான மிலன் அருகே உள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் பல்பொருள் அங்காடியில் உள்ள கேரிஃபோரில் உள்ளூர் நேரப்படி சுமார் 18:30 மணிக்கு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
அசாகோ பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, 30 வயதான பல்பொருள் அங்காடி காசாளர் ஒருவர் இறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், காயமடைந்தவர்களில் அர்செனல் அணியின் பிரபல கால்பந்து வீரரான பாப்லோ மாரி உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
46 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், பல்பொருள் அங்காடி அலமாரிகளில் இருந்து ஆயுதத்தை கைப்பற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மையத்திற்குள் அலறல் சத்தம் கேட்டதாகவும், பயந்துபோன பார்வையாளர்கள் பீதியில் ஓட முயன்றதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர் பல வாடிக்கையாளர்களால் தடுத்து வைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.