மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக வலுவாக கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
மும்பையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் பயங்கரவாத எதிர்ப்பு குழு மாநாட்டு அமர்வில் பேசிய அன்டனி பிளிங்கன், பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவா்களை நீதிக்கு முன் நிறுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார்.
தாக்குதலுக்குக் காரணமானவா்களைத் தண்டிக்காமல் விட்டால், தங்களின் கொடிய குற்றங்கள் சகித்துக் கொள்ளப்படும் என்ற தவறான தகவலை பயங்கரவாதிகளுக்கு அனுப்புவதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தாக்குதல் குறித்து தனது கருத்துகளை வலுவாகவும் தெளிவாகவும் பதிவு செய்த பிளிங்கனுக்கு நன்றி கூறியுள்ள ஜெய்சங்கர், உக்ரைன் மோதல் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளார்.