அடுத்த ஓராண்டுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்க போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் பேச்சாளர் அதை வரவேற்றிருக்கிறார். அதே சமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதை எதிர்த்திருக்கிறது.ரணிலும் கூட்டமைப்பும் மீண்டும் “எக்க ராஜ்ய” என்ற தீர்வைக் கொண்டுவர முயற்சிப்பதாக விமர்சித்திருக்கிறது.
முன்னாள் சமாதான தூதுவர் எரிக்.சூல் ஹெய்ம் அண்மையில் கொழும்புக்கு வந்திருந்தார். அவர் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகராக பொறுப்பை ஏற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவருடைய வருகையின் உள்நோக்கம் அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டது என்ற ஊகம் பரவலாக உண்டு.
2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க மைத்திரிபால சிறிசேனவோடு இணைந்து ஆட்சியை பகிர்ந்த பொழுது அரசியல் தீர்வுக்கான முன் முயற்சிகளை முன்னெடுத்தார்.இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை உருவாக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தை சாசனப் பேரவையாக மாற்றினார்.அதன் பின் யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழு ஒன்றை உருவாக்கி அதன்கீழ் உபகுழுக்களையும் உருவாக்கினார். அதன்மூலம் உருவாக்கப்பட்ட இடைக்கால வரைபு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.அது அடுத்தடுத்த கட்டத்துக்கு போவதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆட்சியின் பங்காளிகளில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன மஹிந்தவின் பக்கம் போனார். அதனால் யாப்பை வரையும் முயற்சிகள் இடையில் தொங்கி நின்று விட்டன.
அதன் பின் ஆட்சிக்கு வந்த கோட்டாபய யாப்புருவாக்கத்துக்கான நிபுணர் குழு ஒன்றை உருவாக்கி புதிய யாப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார். இப்பொழுது அவரும் இல்லை. மறுபடியும் ரணில் வந்து விட்டார். ரணில் முன்பு 2018 ஆம் ஆண்டு தான் விட்ட இடத்திலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வை தொடர்ந்து முன்னெடுப்பாரா? அல்லது புதிய வழியில் செல்வாரா? என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு அவர் ஒரு பிரதமர். நிறைவேற்று அதிகாரம் அற்றவர். இப்பொழுது அவர் ஜனாதிபதி. நிறைவேற்று அதிகாரம் உடையவர். 22 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னரும் அவர் பலமாகத்தான் காணப்படுகிறார். இப்பொழுது அவருடைய பலத்தை யாப்பு மட்டும் தீர்மானிக்கவில்லை. தாமரை மொட்டு கட்சியின் இயலாமையும் தீர்மானிக்கிறது. அவருடைய உட்கட்சி எதிரியான சஜித் பிரேமதாசவின் இயலாமையும் தீர்மானிக்கிறது. எனவே 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது ரணில் பலமாக இருக்கிறார். மேலும் அடுத்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைத்துவிடும். அப்பொழுது அவர் தாமரை மொட்டு கட்சியில் தங்கியிருப்பதிலிருந்து ஒப்பீட்டளவில் விடுபட முடியும். எனவே அவர் மேலும் பலமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.
பொருளாதார நெருக்கடியை அவர் ஒப்பீட்டளவில் தளர்த்தியிருக்கிறார். ஆனாலும் பொருட்களின் விலைகளை முழுமையாக கீழே கொண்டுவர முடியவில்லை. தவிர புதிதாக வரிகளையும் அறிமுகப்படுத்தப் போகிறார். அது புதிய போராட்டங்களை உருவாக்கக்கூடும். இப்படிப்பட்டதோர் பின்னணியில் அவர் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு துணிச்சலான முயற்சியில் அவர் இறங்குவாரா என்ற கேள்வி உண்டு.
ஆனால் அவர் அப்படி ஒரு முயற்சியில் இறங்குவார் என்றும் அப்பொழுது 2015 இலிருந்து ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக அவரோடு சேர்ந்து உழைத்த கூட்டமைப்பு மீண்டும் அந்நிகழ்ச்சியில் அவரோடு இணையப்போகிறது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது.கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் அக்கட்சியின் தலைவர் நடாத்திய ஊடகச் சந்திப்பில் அது தொடர்பாக கூறப்பட்டுள்ளது.
ரணில் ஒரு தீர்வு முயற்சியை முன்னெடுப்பாராக இருந்தால் தமிழ்த் தரப்பு அம்முயற்சியை எவ்வாறு அணுகும்? எதிர்க்கட்சிகள் எவ்வாறு அணுகும்?
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் முன்னரே விட இப்பொழுது அதிகமாகத் தளர்ந்து போய்விட்டார்.அதுமட்டுமல்ல கூட்டமைப்பு இப்பொழுது ஒப்பீட்டளவில் பலமிழந்துபோய் இருக்கிறது. ஒப்பீட்டளவில் பெரிய கட்சியாக அது காணப்பட்டாலும் அதன் ஆசனங்களில் ஆறை இழந்துவிட்டது. எதிர்த்தரப்பில் மாற்று அணி மூன்று ஆசனங்களை கொண்டிருக்கிறது. ஒரு யாப்புருவாக்க முயற்சியில் பெரும்பாலும் விக்னேஸ்வரன் கூட்டமைப்போடு இணையக் கூடும். நிச்சயமாக கஜேந்திரக் குமார் இணைய மாட்டார். அதே சமயம் கிழக்கில், கிழக்குமையக் கட்சிகளின் எழுச்சியானது ரணிலுக்கு சாதகமானது.வடக்கு கிழக்கு இணைப்பு என்ற விவகாரத்தை தனக்கு சாதகமாக அவர் கையாள முடியும். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ்த் தரப்பு 2015ல் காணப்பட்டதை விடவும் இப்பொழுது பலவீனமாக உள்ளது என்பதே சரி.
இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்தாலும் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும் ரணில் தொடர்ந்து முன் செல்லக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகின்றன.
அதேசமயம் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை சஜித் பிரேமதாச முன்பு 2018ல் கைவிடப்பட்ட யாப்புருவாக்க முயற்சிகளை எதிர்பாரா? ஏனெனில் அம் முயற்சிகளில் அவரும் ஒரு பங்காளி.இப்பொழுது ரணிலை எதிர்க்கிறார் என்பதற்காக அம்முயற்சியை அவர் எதிர்க்கமுடியாது.
2018ல் யாப்புருவாக்க முயற்சிகளை எதிர்த்ததும் யாப்பின் இடைக்கால வரைவு அடுத்தடுத்த கட்டங்களுக்கு போக முன்பு ஆட்சியை ஒரு யாப்புச்சதி முயற்சி மூலம் கவிழ்த்ததும் மகிழ்ந்த அணிதான்.ஆனால் அவர்கள்தான் இப்பொழுது ரணிலின் பலமாக காணப்படுகிறார்கள். அதாவது ரணில் மகிந்த அணியின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த ஒரு ஜனாதிபதி. எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சியில் 2018 எதிர்நிலையில் காணப்பட்ட பலமான அணி இப்பொழுது ரணிலின் பக்கம் நிற்கின்றது.
இதில் சிறு சிறு எதிர்ப்புகளை விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்றவர்கள் காட்டக்கூடும். ஆனால் அந்த எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறத் தேவையான பலம் இப்பொழுது ரணிலுக்கு உண்டு.
எனவே கூட்டிக்கேகழித்துப் பார்த்தால் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான வாய்ப்புகள் தனக்கு சாதகமாக இருப்பதாக ரணில் கருத இடமுண்டு. அந்த துணிச்சலில்தான் அவர் அடுத்த ஆண்டுக்குள் தீர்வைக் கண்டு விடப் போவதாகக் கூறுகிறாரா? அல்லது அனைத்துலக சமூகத்தையும் ஐநாவையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் திசைதிருப்பும் உத்திகளில் இதுவும் ஒன்றா?
யாப்புருவாக்க முயற்சிகளை அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவரோ இல்லையோ இவ்வாறு அறிவிப்பதன்மூலம் அவர் பின்வரும் அனுகூலங்களைப் பெறலாம்.
முதலாவது, பன்னாட்டு நாணய நிதியத்தை திருப்திப்படுத்தலாம். இந்த ஆண்டின் இறுதியளவில் பன்னாட்டு நாணய நிதியம் முதல் தொகுதி உதவியை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குமுன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் ரணிலுக்கு உண்டு. அந்த நிபந்தனைகளில் முக்கியமானவை, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை நிரூபிப்பது. அதற்கு இனப்பிரச்சனையை தீர்க்கப் போவதான ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இரண்டாவது அனுகூலம், அனைத்துலக சமூகத்தையும் ஐநாவையும் சமாளிக்கலாம். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர் முயற்சி செய்வதாக ஒரு தோற்றத்தை கட்டியெழுப்பினால், அனைத்துலக சமூகம் மேலும் அவரை நோக்கி வரும்.இப்பொழுது கிடைக்கும் உதவிகள் மேலும் அதிகமாக கிடைக்கும். குறிப்பாக ஐநாவில் ஜெனிவாக் கூட்டத் தொடர்களை அமைதிப் படுத்த அது உதவும். இது விடயத்தில் எரிக்.சூல் ஹெய்ம் அவருக்கு அருகே இருப்பது அவருக்கு ஒரு பிளஸ் பொயிண்ட்.
மூன்றாவதாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைக் கவர்வதற்கு அது உதவும். இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதான ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்பினால் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் நாட்டுக்குள் வரும். முதலீடுகளைச் செய்யும். அதைவிட முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஐநாவில் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் தீவிரத்தை குறைக்க அது உதவும். அல்லது குறைந்தபட்சம் 2015 இலிருந்து செய்ததுபோல புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பிரித்துக் கையாள்வதற்காவது அது உதவும்.
எனவே அடுத்த ஆண்டுக்குள் ஒரு தீர்வு கிடைக்குமோ இல்லையோ, அதற்காக ரணில் விசுவாசமாக உழைப்பாரோ இல்லையோ, அவ்வாறு உழைப்பதற்கான நிலைமைகள் நாட்டில் இருக்குமோ இல்லையோ,இவ்வாறு அறிவிப்பதன்மூலம் அவர் தற்காலிகமாகப் பல அனுகூலங்களை அடைய முடியும்.