ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்குவது தொடர்பான இறுதி அமைச்சரவை தீர்மானம் காத்திருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டால் (Richard Nuttall) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் போது உலகின் ஏனைய விமான சேவைகளைப் போன்று ஸ்ரீலங்கன் விமான சேவையும் நட்டத்தை சந்தித்த போதிலும் கடந்த 12 மாதங்களில் நிறுவனம் செயற்பாட்டு இலாபத்தை ஈட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் முழுமையான இலாபம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் கடந்த காலங்களில் ஏற்பட்ட நட்டத்திற்கு செலுத்த வேண்டிய வட்டியே இதற்குக் காரணம் எனவும் ரிச்சர்ட் நட்டால் தெரிவித்துள்ளார்.
தனியார் மயமாக்கல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தெளிவான மற்றும் வலுவான எதிர்காலம் உள்ளதாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, குறிப்பாக சுற்றுலாத்துறையின் வளர்ச்சி காரணமாக தேசிய விமான சேவையின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.