ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-02இல் தொடரின் 30ஆவது போட்டியில், தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றிபெற்றது.
பெர்த் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், தென்னாபிரிக்கா அணியும் இந்தியக் கிரிக்கெட் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 4 விக்கெட்டுகளையும் பார்னெல் 3 விக்கெட்டுகளையும் நோக்கியா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 134 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் ஹெய்டன் மார்கிரம் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி, ஹர்திக் பாண்ட்யா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய லுங்கி ங்கிடி தெரிவுசெய்யப்பட்டார்.
இதற்கு முன்னதாக நடைபெற்ற 30ஆவது போட்டியில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.