பயணிகள் போக்குவரத்தில் மாத்திரம் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடு முதற்கட்டமாக இன்று முதல் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://wptaxi.lk/ எனும் முகவரிக்குள் பிரவேசித்து, கூடுதல் எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோக ஒதுக்கீடு 5ல் இருந்து 10 லீற்றராக அதிகரிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மீள் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி முச்சக்கர வண்டிகளுக்கான பதிவு இன்று முதல் இணையத்தளத்தின் ஊடாக இடம்பெறவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், குறித்த திட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி முதல் ஏனைய மாகாணங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.