கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானக் காணியில் தனி நபர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற நிலப் பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட ஆலோசனைக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) மாலை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இந்த விசேட ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதான எல்லைகளில் இடம்பெறும் அத்துமீறல்கள், அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் போன்ற விடயங்களை தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இம்மைதானக் காணியின் எல்லைப்பகுதிகளில் கடந்த 25 வருடங்களுக்கு மேலான காலப் பகுதிகளில் தனி நபர்களின் அத்துமீறல்கள் காரணமாக அதன் பரப்பளவானது குறிப்பிடத்தக்களவு குறைவடைந்திருப்பதாகவும் இயற்கையாக நீர் வடிந்தோடும் கால்வாய் கூட அடைக்கப்பட்டிருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கின்ற நபர்களை விரைவாக கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்து, தேவையான அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்குவதற்கும் இணக்கப்பாட்டுக்கு முன்வரத் தவறுகின்ற ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.