இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.
நாட்டில் புதிதாக 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி பாதிப்பு எண்ணிக்கை 830ஆக பதிவாகியிருந்த நிலையில், அதற்குப் பின்னர் கடந்த 11 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்திருந்தது.
நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 132ஆக பதிவாகியிருந்த நிலையில், 11 நாட்களுக்கு பின்னர் தினசரி பாதிப்பு இன்று மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.
இதனையடுத்து, மொத்த பாதிப்பு 4 கோடியே 46 இலட்சத்து 61 ஆயிரத்து 516 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று டெல்லி மற்றும் ஒடிசாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 இலட்சத்து 30 ஆயிரத்து 509 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஆயிரத்து 252 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 இலட்சத்து 16 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தொற்றுக்கு உள்ளான 14 ஆயிரத்து 515 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.