இந்தியாவில் நடைபெறும் ரி-20 லீக் தொடரான ஐ.பி.எல். தொடரிலிருந்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான கிய்ரன் பொலார்ட் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல். 2023 தக்கவைப்பு ஏலத்தில் இருந்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் பட்டியலில் இருந்து விடுவித்ததைத்தொடர்ந்து, அவர் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.
அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.எல்.ரி. லீக் அணியான மும்பை எமிரேட்ஸின் வீரராக அவர் தொடர்வார் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தனது ஓய்வுக்குறித்து பொலார்ட் கூறுகையில், ‘இந்த முடிவை எடுப்பது சுலபமாக இல்லை. ஏனெனில் இன்னும் சில வருடங்களுக்கு விளையாட நான் தயாராக இருந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விவாதித்த பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். என்னால் மும்பை அணிக்குத் தொடர்ந்து விளையாட முடியாது என்றால் அந்த அணிக்கு எதிராகவும் விளையாட முடியாது. மும்பை இந்தியன்ஸ் வீரர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான்.
எனினும் ஐபிஎல் தொடரில்; மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளேன். எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளேன். நாங்கள் ஒன்றிணைந்து 2011, 2013இல் சம்பியன் லீக்கையும் 2013, 2015, 2017, 2019, 2020 ஆண்டுகளில் ஐபிஎல் சம்பியன் கிண்ணங்களையும் வென்றுள்ளோம்’ என கூறினார்.
2010ஆம் ஆண்டு முதல் 13 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடிய பொலார்ட், மும்பை அணிக்காக 189 போட்டிகளில் 16 அரை சதங்களுடன் 3412 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஸ்டிரைக் ரேட் – 147.32 ஆகும்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரரான கிய்ரன் பொலார்ட், ரி-20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார்.
பொலார்ட் கடந்த சீசன் முழுவதும் 11 போட்டிகளில் விளையாடி 144 ஓட்டங்களே குவித்தார். இவர் கடந்த சீசனில் அவர் 6 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார்.