உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மேலும் 120 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் உணவு பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக கருதப்படும் இத்திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை செயற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் இருந்து உணவு, உர ஏற்றுமதிக்கு உள்ள பல்வேறு தடைகளை களைய வேண்டும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த ஒப்பந்த நீடிப்பை வரவேற்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி, உலகத்தில் நிலவும் உணவு தட்டுப்பாட்டு பிரச்னையை தீர்க்க இந்த முடிவு உதவும் என கூறியுள்ளார்.
மேலும், ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனி குட்டெரஸ், துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
ஜ.நா. பாதுகாப்பு சபையின் அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான துணை செக்ரடரி ஜெனரல் ரோஸ்மேரி டிகார்லோ கூறுகையில், ‘இந்தத் திட்டத்தின் மூலம் கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்ட 10 மில்லியன் டன் உணவு தானியங்கள் 40 நாடுகளுக்கு சென்றடைய உள்ளன. இதன் மூலம் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படும். உணவு, உர ஏற்றுமதி செய்ய ரஷ்யாவுக்கு எந்தவித தடையும் இல்லை’ என கூறினார்.
கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல்வேறு உணவு தானியங்களை வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளாக ரஷ்யா, உக்ரைன் உள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மத்தியில், உக்ரைன், ரஷ்யா, துருக்கியுடன் சமாதான ஒப்பந்தம் கடந்த ஜூலை 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இதனால் சுமார் 10 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் கருங் கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டன.
இந்தக் கப்பல்கள் கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் பாதுகாப்பாக அமைந்தது. நவம்பர் 19ஆம் திகதியுடன் இந்த ஒப்பந்தம் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில் மேலும் 120 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் கருங்கடல் பகுதியில் உணவுப் பொருள்களை ஏற்றி சென்ற கப்பல்கள் மீது உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறி இந்த திட்டத்தை சில நாட்களுக்கு ரஷ்யா ஒத்திவைத்திருந்தது. ஆனால் இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்திருந்தது.