சவுதி அரேபிய அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று (புதன்கிழமை) ஒருநாள் தேசிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
22ஆவது உலக கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது.
லுசைல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஆர்ஜெண்டீனா அணியும் சவுதி அரேபியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இதில் சவுதி அரேபியா அணி சார்பில், சலே அல்ஷெஹ்ரி 48ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், சலீம் அல்டவ்சாரி போட்டியின் 53ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
ஆர்ஜெண்டீனா அணி சார்பில், அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதனையடுத்து, இந்தப்போட்டியில், சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இந்த நிலையில், சவுதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
அதன்படி, சவுதி அரேபியாவிலும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறையை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.