இனக்கலவரத்தைத் தூண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்த வாகன உரிமத் தகடுகள் தொடர்பான நீண்டகால சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர கொசோவோவும் செர்பியாவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் நேற்று (புதன்கிழமை) டுவிட்டரில் இதனை உறுப்படுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஐரோப்பிய ஒன்றிய வசதியின் கீழ் கொசோவோ மற்றும் செர்பியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளர்கள், மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
கடந்த 2008இல் செர்பியாவிடம் இருந்து தன்னைத்தானே சுதந்திரமாக அறிவித்த கொசோவோஇப்போது தங்கள் உறவுகளை எவ்வாறு சீராக்குவது என்பது குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவில் கவனம் செலுத்தும் என ஜோசப் பொரெல் மேலும் தெரிவித்தார்.
கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் சுமார் 110 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் செர்பியா, ரஷ்யா, சீனா மற்றும் ஐந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.
1999ஆம் ஆண்டுக்கு முன்னர் கொசோவோ, செர்பியாவின் ஒரு பகுதியாக இருந்த காலத்திலிருந்தே கார் தகடுகளை மாற்றுமாறு பிரிஸ்டினாவில் உள்ள அரசாங்கம் அதன் செர்பிய சிறுபான்மையினரைக் கோர முயன்றதை அடுத்து மேற்கு பால்கன் அண்டை நாடுகளுக்கு இடையே சமீபத்திய சர்ச்சை வெடித்தது.
ஆனால் கொசோவோவின் வடக்குப் பகுதியில் உள்ள செர்பியர்கள், பிரிஸ்டினாவின் அதிகாரத்தை அங்கீகரிக்க மறுத்து, இன்னும் தங்களை செர்பியாவின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். தடையை எதிர்த்தனர், சில நேரங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
கீழ்ப்படியாமையின் அடையாளமாக, கொசோவோவின் செர்பிய சிறுபான்மையினரைச் சேர்ந்த 600 பொலிஸ்துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் பிற மாநிலத் தொழிலாளர்கள் இந்த மாத தொடக்கத்தில் தங்கள் வேலையை விட்டுவிலகிவிட்டனர்.
இந்த சர்ச்சை ஐரோப்பிய ஒன்றியத்தில் எச்சரிக்கை மணியை ஒலித்தது. இதனைத்தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், உறவுகளை இயல்பாக்க முயற்சிக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வருகிறது மற்றும் இரு தரப்பினரும் ஆத்திரமூட்டும் சைகைகளை நிறுத்த விரும்புகிறது.