கம்போடியாவின் கலாசார நகரமான சீம் ரீப்பில் உள்ள அங்கோர் வாட்டின் வாட் ராஜா போ பகோடாவில் உள்ள பழங்கால இராமாயண சுவரோவியங்களின் பாதுகாப்பதற்கு இந்தியா நிதியுதவி செய்கிறது.
குறித்த சுவரோவியங்கள் கம்போடிய சமுதாயத்தில் இந்திய கலாசார தாக்கத்தை சித்தரிப்பதாக உள்ளது.
வாட் ராஜா போ பகோடா ஓவியங்களைப் பாதுகாத்தல் தொடர்பாக நிதியளிக்கும் ஒப்பந்தம் இந்தியாவிற்கும் கம்போடியாவிற்கும் இடையே கலாசாரம், வனவிலங்கு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் கையெழுத்திடப்பட்ட நான்கு ஒப்பந்தங்களில் ஒன்றாகவுள்ளது.
ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், கம்போடிய பிரதமர் ஹுன் சென்னை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்போது, நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கம்போடியாவின் வெளியுறவு அமைச்சுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையே மறுசீரமைப்புப் பணிகளைச் செய்வதற்கான நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு நிதி அளிப்பதை கொண்டதாகும்.
மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது, ஜோத்பூரில் உள்ள ஐஐடி மற்றும் கம்போடியாவின் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கலாசார பாரம்பரியத்தின் டிஜிட்டல் ஆவணப்படுத்தலுக்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அத்துடன், இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சு மற்றும் கம்போடியாவின் சுகாதார அமைச்சுக்கும் இடையே சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் மேம்பாடுகளை பகிர்வதற்கான மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அத்துடன், கம்போடியாவில் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம், இந்தியாவின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சுக்கும் கம்போடியாவின் சுற்றுச்சூழல் அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்தானது.
அத்துடன் குறித்த ஒப்பந்தத்தில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வனவிலங்கு மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்புக்களை பகிர்வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்போடியாவில் உள்ள கோவில்களின் மறுசீரமைப்பு பணிகளில் இந்தியா நீண்ட காலமாக தொடர்புகளைக் கொண்டுள்ளது.
அங்கு 2003 ஆம் ஆண்டு முதல், பிரம்மாவின் கோவில் மறுசீரமைப்புப் பணிகளில் இந்திய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இந்திய தொல்பொருள் நிபுணர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கெமர் மன்னன் ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்ட அந்தக் கோவில் ஆரம்பத்தில் புத்தமடாலயமாக கட்டப்பட்டது. பின்னர் ஜெயவர்மனால் அவரது தாயாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதேவேளை, கம்போடியாவுக்கு அங்கோர் நகரம் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய தளமான அங்கோர் வாட்டின் தாயகமாகவும் உள்ளது.
அங்கோர் தென்கிழக்கு ஆசியாவின் மிகமுக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.