உக்ரைனில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் தாய்மார்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஆறுதல் கூறியுள்ளார்.
மாஸ்கோவிற்கு அருகிலுள்ள அவரது அரச இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில், ‘உங்கள் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்’ என்று தாய்மார்களிடம் புடின் கூறினார்.
‘ஒரு மகனின் இழப்பை எதுவும் ஈடுசெய்ய முடியாது’ என்று அவர் தனது தொடக்க கருத்தில் குறிப்பிட்டார்.
நான் தனிப்பட்ட முறையில் மற்றும் நாட்டின் அனைத்துத் தலைமைகளும் இந்த வலியைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.
அவர் ஒரு தாயிடம் தனது மகன் தன் இலக்கை அடைந்துவிட்டான் மற்றும் வீணாக இறக்கவில்லை என்று கூறினார்.
தொலைக்காட்சி அல்லது இணையத்தில் பொங்கி எழும் போர் பற்றிய போலி மற்றும் பொய்களை நம்ப வேண்டாம் என்றும் ஜனாதிபதி பெண்களை வலியுறுத்தினார்.
ரஷ்யாவிற்குள், உக்ரைன் மீதான அவரது படையெடுப்பிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும், இராணுவ வீரர்களின் தாய்மார்களின் குழுக்கள், தங்கள் மகன்கள் மோசமான பயிற்சி பெற்றவர்களாகவும், குறிப்பாக கடுமையான குளிர் காலநிலை தொடங்குவதால் போதிய ஆயுதங்கள் மற்றும் உடைகள் இல்லாமல் போருக்கு அனுப்பப்படுவதாகவும், வெளிப்படையாகப் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பல தாய்மார்கள் கிரெம்ளின் சார்பு இயக்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் கூட்டத்திற்கு கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மிக மூத்த அமெரிக்க ஜெனரல் மார்க் மில்லியின் கூற்றுப்படி, பெப்ரவரி 24ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100,000 ரஷ்ய மற்றும் 100,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.