கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தவிர்த்து, தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து வலுவாக இருப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 11 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணுவது குறித்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளமையை இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டமைப்புக்குள் காணப்படும் பங்காளிக் கட்சிகளுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் உட்பூசல்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.
அதன்படி உள்ளக விமர்சனங்களை பொதுவெளியில் உரையாடுவதை கைவிடுவது என்றும் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.