தனிநபர் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யும் நடைமுறையில் சிபிஐயின் வழிகாட்டு நெறிமுறைகளை காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தனிநபரின் மின்னணு சாதனைங்களை பறிமுதல் செய்தல், ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பாக சிபிஐக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி கல்வியாளர்கள் 5 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஓகா ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘உலகம் முழுவதும் தனியுரிமைப் பிரச்னையைத் தொடர்ந்து விசாரணை அமைப்புகளின் கையேடுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘உலகமே மாறும் போது, சிபிஐயும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். தனிநபர் மின்னணு சாதனங்களை பறிமுதல், ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை காலத்திற்கேற்ப புதுப்பிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம்’’ என உத்தரவிட்டு வழக்கை பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.