சமீபத்தில் நடந்த அரசாங்கத்துக்கு எதிரான அமைதியின்மையால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதல் தூக்கு தண்டனையை ஈரான் அறிவித்துள்ளது.
‘கடவுளுக்கு எதிரான பகை’ எனப்படும் குற்றத்திற்காக புரட்சிகர நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட மொஹ்சென் ஷெகாரி என்பவர் இன்று (வியாழக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டார் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செப்டம்பர் 25ஆம் திகதி தலைநகர் தெஹ்ரானில் ஒரு முக்கிய வீதியை மறித்து துணை இராணுவ பாசிஜ் படையின் உறுப்பினரை கத்தியால் காயப்படுத்தியதற்காக அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
எந்தவிதமான நடைமுறையும் இல்லாமல் விசாரணைக்கு பிறகு அவர் குற்றவாளி அறிவிக்கப்பட்டதாக, ஒரு செயற்பாட்டாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் இயக்குனரான மஹ்மூத் அமிரி-மொகத்தம், ஈரானிய அதிகாரிகள் சர்வதேச அளவில் விரைவான நடைமுறை விளைவுகளை எதிர்கொள்ளும் வரை, எதிர்ப்பாளர்களின் மரணதண்டனை தினமும் நடைபெறத் தொடங்கும் என்று டுவீட் செய்துள்ளார்.
ஈரானின் நீதித்துறை இதுவரை 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
பெண்கள் தலைமையிலான போராட்டங்கள், நாட்டின் 31 மாகாணங்களிலும் உள்ள 160 நகரங்களில் பரவி, 1979ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசிற்கு ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சவால்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஈரானின் தலைவர்கள் அவற்றை நாட்டின் வெளிநாட்டு எதிரிகளால் தூண்டப்பட்ட கலவரங்கள் என்று சித்தரித்து, பாதுகாப்புப் படையினரை தீர்மானமாக கையாளுமாறு உத்தரவிட்டனர்.
இதுவரை, குறைந்தபட்சம் 475 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 18,240 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 61 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி தெஹ்ரானில் பொது இடத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி, 22 வயதான மாஸா அமினி என்ற இளம்பெண்ணை அறநெறி காவல் படையினர் கைதுசெய்தனர்.
காவலில் இருந்த அவரை காவல் படையினர் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் 16ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணியமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாபுக்கு எதிராகவும், அரசாங்கத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.