லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 5ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் தம்புள்ளை அவுரா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டிக்வெல்ல 62 ஓட்டங்களையும் சந்திமால் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும் சிக்கண்டர் ரஸா, ரத்னாயக்க மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை அவுரா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் அபேல் 33 ஓட்டங்களையும் தசுன் சானக ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், சுரங்க லக்மால், டொமினிக் ட்ரேக்ஸ் மற்றும் கரீம் ஜெனட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 41 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 8 பவுண்ரிகள் அடங்களாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிரோஷன் டிக்வெல்ல தெரிவுசெய்யப்பட்டார்.