தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி,
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க வருமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்களக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், ஒற்றையாட்சியைக் கைவிட்டு சமஷ்டி அடிப்படையில் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளிக்காமல் இந்தக் கலந்துரையாடலுக்குத் தமது கட்சி செல்லாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் என நம்பப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளான எம்.ஏ.சுமந்திரன் (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் கடந்த வாரம் மேற்படி கூட்டம் தொடர்பில் தனித்தனியாக ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினர் எனவும் கூறப்படுகின்றது.