75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்இடம்பெற்ற கட்சி தலைவர்களுடான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு தீர்வு காண்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தத்திற்கு ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் அரை குறையாக இணக்கம் தெரிவித்தார்கள்.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கட்சி தலைவர்களுடான சந்திப்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலந்து கொண்டேன்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் அரசியல் தீர்வு தொடர்பில் அவதானம் செலுத்துவது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பது சந்தேகத்திற்குரியது.
அரசியல் தீர்வு குறித்து அவதானம் செலுத்தும் தமிழ் தலைமைகள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட மாகாண சபை தேர்தலை பாதுகாக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
ஆகவே காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த அவதானம் செலுத்த வேண்டும் என்பதை கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்த எந்த அரசாங்கத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட முடியவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது.
அரசாங்கம் எடுக்கும் எந்த தீர்மானத்தையும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளபோவதில்லை.
ஆகவே மக்களாதரவுடன் பிரச்சினைக்கு தீர்வு காண தேர்தலை நடத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
75 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத இனப்பிரச்சினைக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண்பது சாத்தியமற்றது.
அரசியல் தீர்வுக்காக ஒன்றிணையும் அரசியல் கட்சி தலைமைகள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.